Oct 20, 2025
Thisaigal NewsYouTube
விடாமுயற்சிக்கு வில்லனாகும் உதயநிதி... லைகாவின் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட ரெட் ஜெயண்ட்ஸ்?
சினிமா

விடாமுயற்சிக்கு வில்லனாகும் உதயநிதி... லைகாவின் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட ரெட் ஜெயண்ட்ஸ்?

Share:

இந்தியா, ஜூன் 11-

அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் ஜூன் கடைசி வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாம்.

அஜித்தின் 62-வது படம் விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் ரெஜினா, அர்ஜுன் சர்ஜா, ஆரவ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மகிழ் திருமேனி இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கியது.

அங்கு இரண்டு மாதங்கள் இடைவிடாது ஷூட்டிங்கை நடத்திய படக்குழு பின்னர் புத்தாண்டு விடுமுறைக்கு சென்னை திரும்பியது. அதன்பின்னர் மீண்டும் அஜர்பைஜான் பறந்த படங்குழு அங்கு சில தினங்கள் மட்டுமே ஷுட்டிங்கை நடத்திய நிலையில், அங்கு ஏற்பட்ட வானிலை சூழல் காரணமாக ஷூட்டிங் தொடர்ந்து நடத்த முடியாமல் போனது. இதனால் அங்கிருந்து சென்னை திரும்பிய படக்குழு அதன் பின்னர் ஷூட்டிங்கை தொடங்கவே இல்லை.

அஜித்தும் விடாமுயற்சி படப்பிடிப்பு தாமதம் ஆனதால் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கிளம்பிவிட்டார். விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்ததற்கு லைகா நிறுவனம் தான் காரணம் என கூறப்பட்டது. ஏனெனில் ஒரே நேரத்தில் இந்தியன் 2, வேட்டையன், விடாமுயற்சி என மூன்று பிரம்மாண்ட படங்களை தயாரிப்பதால் அதற்கு தேவையான நிதியை ஒதுக்க முடியவில்லையாம். இதனால் விடாமுயற்சியை கிடப்பில் போட்டுவிட்டு வேட்டையன் மற்றும் இந்தியன் 2 படத்தை முதலில் முடித்தனர்.

தற்போது இந்தியன் 2 படமும் வருகிற ஜூலை மாதம் ரிலீஸ் ஆக உள்ளதால் போட்ட பணத்தை முதலில் எடுத்துவிடலாம் என்கிற கனவில் விடாமுயற்சி படப்பிடிப்பை ஜூன் மாத இறுதியில் தொடங்க திட்டமிட்டிருக்கிறது லைகா. ஆனால் இந்தியன் 2 படத்தில் தாங்களும் அதிக பணத்தை கொட்டி இருப்பதால் முதலில் அப்படத்தின் மூலம் கிடைக்கும் பணத்தை தாங்கள் எடுத்துக் கொள்வதாக ரெட் ஜெயண்ட் நிறுவனம் ஒரு குண்டை தூக்கிப் போட்டுவிட்டதாம்.

இதனால் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடர்ந்து திட்டமிட்டபடி நடக்குமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது என வலைப்பேச்சு அந்தணன் கூறி இருக்கிறார். மறுபடியும் விடாமுயற்சி படத்தை தள்ளிப்போட்டால் நடிகர் அஜித் குட் பேட் அக்லி படத்தை முடித்துவிட்டு தான் வருவார் என்பதால் இம்முறை எப்படியாவது ஷூட்டிங்கை நடத்தி முடித்துவிட வேண்டும் என லைகா திட்டமிட்டு இருக்கிறது. அது சக்சஸ் ஆகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related News