சினிமாத் துறையில் இவர்களுக்குத்தான் இந்தப் படத்தின் கதையை எழுதினேன். அதனால் இவர்களுக்கு இது பொருந்தியது என்று இயக்குனர்கள் பல முறை சொல்வதைக் கேட்டிருப்போம். அதை போல இந்தக் கதை எனக்கானது, நான் தவற விட்டு விட்டேன், என நிறைய நடிகர்கள் சொல்லியும் கேள்விப்பட்டிருப்போம். அதே போல தற்போது ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அதாவது கார்த்தி, அரவிந்த்சாமி நடித்து வெளி வந்து அனைவர் மனதிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் மெய்யழகன். அந்தப் பட்த்தில் மெய்யழகன் கதாப்பாத்திரத்தில் கார்த்தி அத்தான் அத்தான் என்று சொல்லியே உருக வைத்திருப்பர்.
இந்நிலையில், மெய்யழகன் படத்தில் கார்த்தி கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது நான்தான். அப்போது வேறு படம் நடித்துக் கொண்டிருந்ததால் அந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை என நடிகர் விஜய் சேதுபதி கூறியிருக்கிறார்.
ஆனால் இப்படத்தில் நடிகர் கார்த்தி ஆகட்டும் அல்லது விஜய் சேதுபதி ஆகட்டும் யார் நடித்திருந்தாலும் அந்தக் கதாப்பாத்திரத்தை அருமையாகச் செய்திருப்பார்கள். ஏனெனில் இரண்டு நடிகர்களும் எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டக்கூடியவர்கள். எனவே அப்படம் நிச்சயம் கொண்டாடப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.