இந்தியா, மே 08-
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் கோட் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடிக்கிறார். மேலும் சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல், நிதின் சத்யா, பிரேம்ஜி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அதில் ஒன்று இளமை கதாபாத்திரம் என்பதால், அதற்காக டீ ஏஜிங் டெக்னாலஜியை பயன்படுத்தி விஜய்யை இளமையாக காட்ட உள்ளனர். இதற்கான பணிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இதனால் அப்படத்தின் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் அண்மையில் வெளியிடப்பட்ட கோட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலுக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது. நடிகர் விஜய் பாடிய இந்த பாடல் பெரியளவில் கவனம் ஈர்க்காததால் அடுத்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். கோட் படத்தில் பல்வேறு சர்ப்ரைஸ்களும் காத்திருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி அப்படத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சிலர் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது லேட்டஸ்ட் அப்டேட்டாக நடிகர் சிவகார்த்திகேயனும் கோட் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருப்பதாக தகவல் பரவி வருகிறது. இது உறுதியானால் நடிகர் விஜய்யுடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் முதல் படம் இதுவாக இருக்கும். கோட் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்ததாக இயக்க உள்ள திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தான் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.