அக்டோபர் 08-
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளிலேயே போட்டியாளர் ரவீந்தருக்கு உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டதைத் தொடர்ந்து, மனிதநேயத்துடன் ரஞ்சித் மற்றும் அருண் ஆகிய இருவரும் அவரை கைத்தாங்கலாக படுக்கைக்கு அழைத்து வந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், முதல் நாளே போட்டியாளர்கள் விறுவிறுப்பாகவும், காரசாரமாகவும் விவாதம் செய்தனர். குறிப்பாக, ஏழு சீசன்களை விமர்சித்த ரவீந்தர், சக போட்டியாளர்களுக்கு எடுத்து வைத்த சில குறிப்புகள் அனைவருக்கும் உதவியாக இருந்தது.

ஆனால், அதே நேரத்தில் டாஸ்க்குகள் செய்ய அவரது உடல் ஒத்துழைக்கவில்லை என்பதும், நேற்றைய டாஸ்க்கில் அவர் மிகுந்த சிரமப்பட்டதையும் 24 மணி நேர நிகழ்ச்சியைப் பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.
இதனைத் தொடர்ந்து திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவரால் எழுந்து நடக்க முடியவில்லை. உடனே சக போட்டியாளர்களான ரஞ்சித் மற்றும் அருண், அவரை கைத்தாங்கலாக அவரது படுக்கைக்கு அழைத்து வந்தனர். அவருக்கு ஆறுதல் கூறி, "உடம்புக்கு ஒன்றும் இல்லை, சரியாகிவிடும்" என ஊக்கமளித்தனர். இந்த இருவரின் மனிதநேயச் செயலுக்கு பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.