பெங்களூரு, ஜூலை.14-
பழம் பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார். அவருக்கு வயது 87. மூப்பால் வரும் உடல்நலப் பிரச்சனையால் காலமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரத்தில் தனது வீட்டிலேயே அவர் காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தியிலும் நூற்றுக்கணக்கானப் படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
கன்னடத்து பைங்கிளி என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சரோஜா தேவி. கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் 1938ம் ஆண்டு ஜன.,7ல் பிறந்த இவர் தனது 17வது வயதில் ‛மகாகவி காளிதாஸ்' என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி புகழ் பெற்றார். தமிழில் ‛நாடோடி மன்னன்' என்ற படத்தில் எம்ஜிஆர் உடன் நடித்து புகழ் பெற்றார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நூறுக்கும் மேற்பட்டப் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில் எம்ஜிஆர், சிவாஜி ஆகியோருடன் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.








