பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த 'பொன்னியின் செல்வன்-1' பிரம்மாண்டமாக செப்டெம்பர்-30 அன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை சிலிர்க்க செய்துள்ளது. இப்படத்தை ட்ரோல் செய்ய காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம் என்றே சொல்லலாம், கப்பல் சண்டை காட்சிகள், பார்வையாலேயே குறிப்பறிதல் என படம் அனைவரையும் ரசிக்க செய்துள்ளது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க பலரும் முயன்று தோற்றுப்போன நிலையில் இயக்குனர் மணிரத்னம் இதில் சாதனை படைத்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, அஷ்வின், சோபிதா, ஐஸ்வர்யா லட்சுமி என பெரிய நட்சத்திர பட்டாளங்களே இணைந்து இப்படத்தை அலங்கரித்துள்ளனர்.பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் போதே இரண்டாம் பாகத்திற்கான பணிகள் ஓரளவு நிறைவடைந்துவிட்டதாகவும், தற்போது இப்படத்திற்கு போஸ்ட் ப்ரொடக்ஷ்ன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படக்குழு இரண்டாம் பாகம் குறித்து தெரிவிக்கையில், முதல் பாகம் வெளியான அடுத்த ஒன்பது மாதங்களில் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் 'பொன்னியின் செல்வன்-2' 2023ம் ஆண்டு கோடை விடுமுறையை கொண்டாட வைக்கும் வகையில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
