இந்தியா, மே 04-
ஏ.ஆர்.ரகுமானின் "மறக்குமா நெஞ்சம்" இசை நிகழ்ச்சியை பார்க்க கரூரை சேர்ந்த அஸ்வின் மணிகண்டன் என்பவர் குடும்பத்துடன் வந்தும், பார்க்கமுடியால் திரும்பிய நிலையில், இவருக்கு ஏசிடிசி நிறுவனம் 67,000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 'மறக்குமா நெஞ்சம்' என்கிற பெயரில் இசை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தார். அந்த சமயத்தில் மழை கொட்டி தீர்த்ததால் நிகழ்ச்சி தடைபட்டது. இதைத்தொடர்ந்து, இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

தகுந்த முன்னேற்பாடுகளுடன் செப்டம்பர் மாதம் 'மறக்குமா நெஞ்சம்' நிகழ்ச்சி சென்னை ஆதித்யா ராம் பேலஸ் சிட்டியில் நடைபெற இருந்த நிலையில், நிகழ்ச்சியை காண பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்று கூடினர். 25 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்க திட்டமிட்ட பட்ட நிலையில், கூடுதலாக பலர் அங்கு திரண்டதால் நிகழ்ச்சியை காண வந்தவர்கள் நிற்க கூட இடமில்லாமல் அவதிப்படும் சூழல் உண்டானது. பலர் கூட்ட நெரிசலில் சிக்கியது மட்டுமின்றி, சிலர் இந்த கூட்டத்தை பயன்படுத்தி பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யாத ஏ சி டி சி நிறுவனத்தின் அஜாக்கிரதை தான் இதற்கு காரணம் என கூறப்பட்டது. மேலும் நிகழ்ச்சியை காண வந்தும் பார்க்க முடியாமல் திரும்பிய சுமார் 4000 பேருக்கு, ஏ ஆர் ரகுமான் அவர்களின் டிக்கெட் பணத்தை திரும்ப வழங்கினார்.
ஆனால் அஸ்வின் மணிகண்டன் என்பவர், கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஏ சி டி சி நிறுவனத்தின் மீது வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சியை பார்க்க குடும்பத்தோடு சென்றதாகவும், நிகழ்ச்சியை காண முடியாததால் திரும்பிய நிலையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏ சி டி சி நிறுவனம்தனக்கு டிக்கெட் தொகை ரூபாய் 12000, இழப்பீடு 50,000, மற்றும் வந்து சென்ற செலவுக்கான தொகை 5,000 என மொத்தம் 67 ஆயிரம் வழங்க வேண்டும் என கூறி இருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த குறைதீர் ஆணையம், டிக்கெட் தொகையுடன் சேர்த்து 67,000 இழப்பீடு வழங்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.