இந்தியா, மே 02-
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தின் டைட்டில் டீசர் அண்மையில் வெளியான நிலையில், இதில் இடம்பெற்ற பாடல் அனுமதி இன்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி இளையராஜா சன் பிச்சர்ஸ் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடித்து வரும், 'வேட்டையன்' படத்தை தொடர்ந்து... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படம் 'கூலி'. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதத்தின் கடைசி வாரத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவ்வப்போது இப்படம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், இந்த படத்தின் டைட்டில் டீசர் ஒன்றை படக்குழு வெளியிட அது படு வைரலானது மட்டும் இன்றி, இப்படத்தின் மீனாதா எதிர்பார்ப்பையும் தூண்டியது. இந்த படமும் LCU படமா என தொடர்ந்து ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வந்ததையும் பார்க்க முடிந்தது.

3 நிமிடங்களுக்கு மேல் ஓடிய இந்த வீடியோவில். இளையராஜா இசையமைத்த 'தங்கமகன்' படத்தில் இடம்பெற்ற 'வா வா பக்கம் வா' பாடலின் இசை இடம்பெற்றதாகவும், இதற்கான உரிய அனுமதி தன்னிடம் பெறவில்லை என கூறி, இளையராஜா சன் பிச்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். மேலும் ‘கூலி’ டீசரில் இருந்து அந்த இசையை நீக்காவிட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது சன் பிச்சர்ஸ் நிறுவனத்திற்கு புதிய தலைவலியாக மாறியுள்ளது.
அதே போல் விக்ரம் படத்திலும், 'ஃ பைட் கிளப்' படத்திலும், 'என் ஜோடி மஞ்சக்குருவி' பாடலை அனுமதி இன்றி பயன்படுத்தியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுளளார். இந்த சம்பவம் தற்போது தமிழ் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.