இந்தியா, ஜூன் 13-
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் படத்துடன் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் தங்கலான் திரைப்படம் மோத உள்ளதாம்.
நடிகர் சீயான் விக்ரமின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய இயக்குனர் தான் பாலா. அவரின் சேது படத்தின் மூலம் தான் முதல் வெற்றியை ருசித்தார் நடிகர் விக்ரம். அப்படத்திற்கு பின்னர் பாலா இயக்கிய பிதாமகன் படத்தில் நடித்ததற்காக நடிகர் விக்ரமிற்கு தேசிய விருதும் கிடைத்தது. விக்ரமை வைத்து இரண்டு மாஸ்டர் பீஸ் படங்களை கொடுத்த இயக்குனர் பாலா அதன் பின்னர் அவருடன் இணைந்து ஒரு படத்தில் கூட பணியாற்றவில்லை.

இதனிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் விக்ரம் தன் மகனை பாலாவின் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்த ஆசைப்பட்டு, அவர் இயக்கத்தில் வர்மா என்கிற திரைப்படத்தில் நடிக்க வைத்தார். இது தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். வர்மா படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் படத்தை பார்த்த விக்ரமிற்கு சுத்தமாக திருப்தி இல்லாததால் அப்படத்தை அப்படியே கைவிட்டுவிட்டார். அதன்பின்னர் வேறு இயக்குனரை வைத்து ஆதித்ய வர்மா என்கிற பெயரில் அப்படத்தை ரீமேக் செய்து வெளியிட்டனர்.

வர்மா படத்தினால் விக்ரம் - பாலாவின் உறவிலும் விரிசல் ஏற்பட்டது. இப்படி இவர்கள் இடையே ரியல் லைஃபில் மோதல் நீடித்து வரும் நிலையில், தற்போது பாக்ஸ் ஆபிஸிலும் இவர்களது மோதல் தொடர உள்ளது. அந்த வகையில் பாலா இயக்கத்தில் தற்போது அருண் விஜய் ஹீரோவாக நடித்து தயாராகி இருக்கும் வணங்கான் திரைப்படமும், பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ள தங்கலான் திரைப்படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளதாம்.

அதன்படி வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று தான் இந்த இரண்டு படங்களும் நேருக்கு நேர் போட்டிபோட உள்ளதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் ரிலீஸ் ஆக இருந்த பான் இந்தியா படமான புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதால், வணங்கான் மற்றும் தங்கலான் படங்கள் ஆகஸ்ட் 15ந் தேதியை டார்கெட் செய்துள்ளனர். விரைவில் இந்த இரண்டு படங்களின் ரிலீஸ் தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.