இந்தியா, மே 06-
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் மாரி செல்வராஜ். இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு திரைக்கு வந்த பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் உடன் கூட்டணி அமைத்த மாரி செல்வராஜ், அவர் நடித்த கர்ணன் படத்தை இயக்கினார். கடந்த 2021-ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
கர்ணன் படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கிய படம் மாமன்னன். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த இப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதேபோல் மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக மிரட்டி இருந்தார். கடந்த ஆண்டு திரைக்கு வந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.80 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது.
வரிசையாக ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்துள்ள மாரி செல்வராஜ், தற்போது இரண்டு படங்களை இயக்கி வருகிறார். அதில் ஒன்று வாழை திரைப்படம். இப்படத்தில் திவ்யா துரைசாமி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதைத்தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக நடித்து வருகிறார்.
கபடி வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது. அதன்படி இப்படத்திற்கு பைசன் காளமாடன் என பெயரிட்டு உள்ளதாக அறிவித்து உள்ளனர். இப்படத்தில் துருவ் விக்ரம் ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். மேலும் லால், பசுபதி, கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.