முன்னணி தமிழ் நடிகர் அஜித்குமார் திரைப்படங்களைத் தாண்டி கார் பந்தயத்திலும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகிறார். கடைசியாக வெளியான குட் பேட் அக்லி படத்துக்குப் பிறகு சினிமாவில் இருந்து தாற்காலிகமாக விலகி கார் ரேஸில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
இவரின், அஜித்குமார் ரேஸிங் என்ற கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெறும் கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் பெற்றுள்ளது. இந்த நிலையில், அஜித்குமார் ரேஸிங் கார் பந்தய நிறுவனத்தில் ஓட்டுநராக தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து அஜித்குமார் ரேஸிங் எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நரேன் கார்த்திகேயனை அஜித்குமார் ரேஸிங்கிற்கு அழைப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். நரேன் எங்களது அணியில் இணைவது உண்மையிலேயே பாக்கியம். அவருடன் இணைந்து பந்தயத்தில் ஈடுபடுவது கௌரவமானது. நரேனுடன் சேர்ந்து 'ஆசிய லீ மான்ஸ்' தொடர் நம் அனைவருக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்தது" என்று அஜித் குமார் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
நரேன், உலகளவில் ஃபார்முலா ஆசியா, சூப்பர் பிக்ஸ் கொரியா போன்ற பல கார் பந்தயங்களில் முதலிடம் பெற்று இந்தியாவின் கார் பந்தய நட்சத்திரமாகத் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.