இந்தியா, ஜூன் 26-
இந்தியன் 2 படத்தின் புரமோஷனில் கலந்துகொண்ட இயக்குனர் அட்லீ, கமல்ஹாசன் உடன் கூட்டணி அமைப்பது குறித்து மனம்திறந்து பேசி இருக்கிறார்.பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் இந்தியன் 2. முதல் பாகம் வெளியாகி 28 ஆண்டுகளுக்கு பின்னர் அதன் இரண்டாம் பாகம் ரெடியாகி இருக்கிறது. இப்படத்தில் கமல்ஹாசன் இந்தியன் தாத்தாவாக நடித்திருக்கிறார். இன்றைய அரசியல் சூழலில் இருக்கும் ஊழல்களை பற்றிய கதையாக இப்படம் தயாராகி இருக்கிறது. இப்படத்தை லைகா நிறுவனமும், ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து உள்ளது.
இந்தியன் 2 திரைப்படம் வருகிற ஜூலை 12ந் தேதி திரைக்கு வர உள்ளது. இந்தியன் 2 படத்தை இயக்கிய சமயத்திலேயே இயக்குனர் ஷங்கர் ராம்சரணின் கேம் சேஞ்சர் படத்தையும் இயக்கி வந்ததால், அந்த சமயத்தில் அவருக்கு பக்கபலமாக அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அறிவழகன், வசந்தபாலன் ஆகியோர் இருந்தனர். ஷங்கர் கேம் சேஞ்சர் ஷூட்டிங்கில் பிசியாக இருந்த சமயத்தில் அவர்கள் சில காட்சிகளை இயக்கியதாகவும் கூறப்பட்டது.
அந்த சமயத்தில் அட்லீ, ஷாருக்கானின் ஜவான் படத்தில் பிசியாக இருந்ததால் அவரால் ஷங்கருக்கு உதவ முடியாமல் போனது. அதை ஈடுகட்டும் விதமாக தற்போது இந்தியன் 2 படத்தின் புரமோஷன் சமயத்தில் ஷங்கருக்கு உதவி இருக்கிறார் அட்லீ. ஜவான் படம் மூலம் தற்போது பாலிவுட்டில் செல்வாக்குமிக்க இயக்குனராக உருவெடுத்துள்ள அட்லீ, மும்பையில் நடைபெற்ற இந்தியன் 2 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார்.
அப்போது பேசிய அட்லீ, எதிர்காலத்தில் எனது மகன் சினிமாவை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என கேட்டால், கமல் சாரின் அனைத்து படங்களையும் பார் என கூறுவேன். ஏனெனில் அவர் ஒரு பைபிள், சினிமாவின் என்சைக்லோபீடியா என புகழாரம் சூட்டினார். தொடர்ந்து கமலுடன் பணியாற்ற விரும்புவதாக தெரிவித்த அட்லீ, ஒரு நாள் கண்டிப்பாக அவருக்கான கதையை தயார் செய்துவிட்டு அவரிடம் சென்று கூறுவேன் என தெரிவித்திருக்கிறார்.