சென்னை, செப்டம்பர்.19-
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கர் நேற்று இரவு 9 மணியளவில் உடல்நலக் குறைவால் காலமானதையடுத்து, கமலஹாசன், ராதிகா உள்ளிட்ட தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த பலர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கோலிவுட் மட்டுமின்றி உலக அளவில் பெரும் ரசிகர்களைக் கொண்ட ரோபோ ஷங்கருக்கு, மலேசியாவிலும் மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
நீண்ட காலமாக மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ரோபோ சங்கர், அதற்கான தொடர் சிகிச்சையை எடுத்து வந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான இரைப்பை குடல் இரத்தப்போக்கு மற்றும் சிக்கலான வயிற்றுப் பிரச்சனை காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக அவருக்கு சிகிச்சையளித்த GEM மருத்துவமனை அறிக்கை கூறுகின்றது.
சிகிச்சைப் பலனின்றி அவர் நேற்று காலமானதையடுத்து, இன்று அவரது உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்படுகின்றது.