இந்தியா, ஜூன் 04-
தமிழ் திரையிலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகிபாபு, தன் சம்பளத்தை மளமளவென உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் தற்போது ஹீரோயின் இல்லாமல் கூட படம் வருகிறது. ஆனால் யோகிபாபு இல்லாத படமே இல்லை என சொல்லும் அளவுக்கு எக்கச்சக்கமான படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் யோகிபாபு. இதற்கு காரணம் கோலிவுட்டில் காமெடி நடிகர்களுக்கு ஏற்பட்டுள்ள பஞ்சம் தான். சந்தானம் ஹீரோவான பின்னர் யோகிபாபுவுக்கு போட்டியாக சூரி, சதீஷ் போன்ற காமெடி நடிகர்கள் இருந்தனர். அவர்களும் தற்போது ஹீரோவாகிவிட்டனர்.

அதில் நடிகர் சூரி காமெடியனாக கொண்டாடப்பட்டதை காட்டிலும் இன்று ஹீரோவாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறார். அவரின் இந்த அசுர வளர்ச்சிக்கு காரணம் வெற்றிமாறன் தான். அவர் இயக்கிய விடுதலை படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான சூரி, இன்று கருடன், கொட்டுக்காளி என அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக கலக்கி வருகிறார். சூரி முழு நேர ஹீரோவாகிவிட்டதால் இனி அவர் காமெடி வேடங்களில் நடிக்க வாய்ப்பே இல்லை என கூறப்படுகிறது.
மறுபுறம் வடிவேலு கம்பேக் கொடுத்த பின்னர் காமெடி வேடங்களை விட குணச்சித்திர வேடங்களில் நடிக்க அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதனால் காமெடியன் என்றால் அது யோகிபாபு மட்டும் தான் என்கிற நிலையில் கோலிவுட் உள்ளது. அவரும் நிற்க கூட நேரமின்றி பம்பரமாய் சுழன்று கொண்டு நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி தனக்கு உள்ள டிமாண்டால் நைசாக் சம்பளத்தையும் மளமளவென உயர்த்தி இருக்கிறார் யோகிபாபு.
அதன்படி அவர் தற்போது ஒரு நாளைக்கு ரூ.12 லட்சம் சம்பளம் வாங்கி வருவதாக பிரபல சினிமா பத்திரிகையாளரான பிஸ்மி கூறி இருக்கிறார். இதன்மூலம் சம்பள விஷயத்தில் வடிவேலுவையே யோகிபாபு ஓவர்டேக் செய்துள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் வடிவேலு ஒரு நாளைக்கு ரூ.10 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருவதாகவும், தற்போது அவரையே மிஞ்சும் வகையில் நடிகர் யோகிபாபு ஒரு நாளைக்கு ரூ.12 லட்சம் சம்பளம் வாங்கி வருகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.