இந்தியா, ஜூலை 02-
சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருந்த புறநானூறு திரைப்படத்தில் இருந்து நடிகர் சூர்யா திடீரென விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் சூர்யாவுக்கு கடந்த சில ஆண்டுகள் சரிவர அமையவில்லை. கடைசியாக அவர் ஹீரோவாக நடித்து வெளிவந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பிளாப் ஆனது. அதைத் தொடர்ந்து 2 ஆண்டுகளாக சூர்யா நடிப்பில் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை. தற்போது கங்குவா என்கிற திரைப்படத்தில் சூர்யா நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தை தான் மலைபோல் நம்பி உள்ளார் சூர்யா.

கங்குவா படத்துக்கு முன்னரே பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகி இருந்தார் சூர்யா. அப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2022ம் ஆண்டு கன்னியாகுமரியில் தொடங்கி சுமார் ஒரு மாதம் நடைபெற்றது. சூர்யாவின் 2டி நிறுவனம் தான் வணங்கான் படத்தை தயாரித்து வந்தது. ஆனால் திடீரென சூர்யாவுக்கும் பாலாவுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் சண்டை ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. அதன்பின்னர் சூர்யா அப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக பாலா அறிவித்தார்.
சூர்யா விலகியதை தொடர்ந்து அவருக்கு பதில் அருண் விஜய்யை ஹீரோவாக வைத்து வணங்கான் படத்தை எடுத்து முடித்துள்ளார் பாலா. அப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது. வணங்கானை டிராப் ஆன பின்னர் சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு என்கிற திரைப்படத்தில் நடிக்க கமிட்டானார் சூர்யா. இதில் சூர்யா உடன் நஸ்ரியா, அதிதி ஷங்கர், துல்கர் சல்மான் ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இப்படத்தின் புரோமோவும் கடந்தாண்டு வெளியிடப்பட்டது.

ஆனால் தற்போது புறநானூறு படத்தில் இருந்தும் சூர்யா விலகி உள்ளாராம். அப்படத்தில் இந்தி எதிர்ப்பு தொடர்பான கதைக்களம் உள்ளதால் அதில் சூர்யா நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. சூர்யா விலகியதை தொடர்ந்து புறநானூறு படத்தில் நடிக்க மற்றுமொரு மாஸ் ஹீரோ கமிட்டாகி இருக்கிறார். அவர் வேறுயாருமில்லை நடிகர் சிவகார்த்திகேயன் தான். இப்படத்தை கேஜிஎப் படத்தை தயாரித்த ஹோம்பாலே நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அநேகமாக இது சிவகார்த்திகேயனின் 25வது படமாக இருக்கவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.