தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால் தற்போது ரவி அரசு இயக்கத்தில் 'மகுடம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். அது அவரது 35-வது படம் ஆகும். நடிகர் விஷாலுக்கு எப்போது திருமணம்? என்று திரை உலகமே ஆவலுடன் காத்திருந்தது. ஆனாலும் நடிகர் சங்கக் கட்டிடம் திறக்கப்பட்ட பின்னர் தான் தனது திருமணம் என்பதில் விஷால் உறுதியாக இருந்தார்.
இதனிடையே, சென்னையில் நடந்த ஒரு பட விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சாய் தன்ஷிகாவை காதலிப்பதாகவும் இருவரும் ஆகஸ்டு 29-ந்தேதி (இன்று) திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் விஷால் அறிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.
இந்நிலையில் சென்னை அண்ணா நகரில் உள்ள விஷால் இல்லத்தில் விஷால் - சாய் தன்ஷிகா திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்வில் இரு வீட்டார் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து விருந்தும் அளிக்கப்பட்டது. திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.