கடந்த 2011 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான படம் 'ஏழாம் அறிவு' ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவன தயாரிப்பில் வெளியான இந்தப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருந்தார். 'கஜினி' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு சூர்யா, ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படம் என்பதால் ஏழாம் அறிவு படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
இந்தப்படத்தின் வெளியீட்டின் போது நடந்த ஒரு சம்பவம் பற்றி தற்போதைய நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். அதாவது 'ஏழாம் அறிவு' படத்தில் ஹீரோயினான ஸ்ருதி ஹாசன் ஒரு காட்சியில் இட ஒதுக்கீட்டால் திறமை இருப்பவர்களுக்கு வாய்ப்பு பறி போவதாக வசனம் ஒன்று பேசியிருப்பார்.
இந்த வசனம் படம் வெளியான சமயத்திலே பல விமர்சனங்களை சந்தித்தது. இந்நிலையில் உதயநிதி இதுக்குறித்து தற்போது பேசும் போது, 'ஏழாம் அறிவு' படத்தில் சமூக நீதியை விமர்சித்து ஒரு வசனம் இடம்பெற்றிருந்தது. படப்பிடிப்பிலும், சீன் பேப்பரிலும் அதனை நான் பார்க்கவில்லை. எனக்கு அப்போது அரசியல் புரிதல் இல்லை. இதற்காக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸை நான் குறை சொல்லவில்லை. அது அவரோட அரசியல் நிலைபாடாக இருக்கலாம். அந்த காட்சி படமாக்கப்பட்ட போது சூர்யாவும் இல்லை.
டப்பிங்கிலும் இப்படி ஒரு வசனம் இருப்பது சூர்யாவுக்கு தெரியவில்லை. ஆனால், படம் பார்த்துவிட்டு சூர்யா எனக்கு போன் செய்தார். 'பாஸு படத்துல ஒரு சீன் வருது. ரிசர்வேஷனை விமர்சனம் பண்ணி ஒண்ணு வருது. அது வேணாம் எடுத்துடுங்கன்னு சொன்னாரு. ஆனா நான் சின்ன விஷயம் தான விட்டுடுங்கன்னு சொன்னேன். அந்த சமயத்துல என்னோட அரசியல் புரிதல் அவ்வளவு தான் இருந்தது.