இந்தியா, ஏப்ரல் 29-
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் ஜப்பானில் வெற்றிநடைபோட்டு வருகிறது.
நாளைய இயக்குனர் நிகழ்ச்சி மூலம் குறும்படங்களை இயக்கி பேமஸ் ஆனவர் தான் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து விஜய் சேதுபதி நடித்த பீட்சா படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் முதல் படத்திலேயே வித்தியாசமான கதையம்சத்தால் ரசிகர்களை ஈர்த்தார். பீட்சா படத்தின் வெற்றிக்கு பின்னர் அவர் இயக்கிய ஜிகர்தண்டா திரைப்படம் மாஸ் ஹிட் அடித்தது. பாபி சிம்ஹா, சித்தார்த், லட்சுமி மேனன் நடிப்பில் வெளிவந்த இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது.
ஜிகர்தண்டா படத்தின் வெற்றிக்கு பின்னர் ரஜினி, தனுஷ், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் கூட்டணி அமைத்த கார்த்திக் சுப்புராஜ், கடந்த ஆண்டு ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகமான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார். அப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்திருந்தார். அவருடன் நிமிஷா சஜயன், எஸ்.ஜே.சூர்யா, சஞ்சனா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் கடந்தாண்டு தீபாவளிக்கு திரைக்கு வந்தது.
ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்தது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் சூர்யாவின் 44-வது திரைப்படத்தை இயக்க கமிட் ஆகி உள்ளார் கார்த்திக் சுப்புராஜ். அப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளிவந்த நிலையில், தற்போது அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் ஷூட்டிங்கையும் தொடங்க உள்ளனர்.
இந்த நிலையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் குறித்து ஒரு மாஸ் அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். அதன்படி அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் உலகின் சில பகுதிகளில் இன்னும் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என குறிப்பிட்டு ஜப்பானில் அப்படத்திற்கு வரவேற்பு கிடைத்து வருவதாக சில ட்வீட்டுகளையும் ஷேர் செய்து இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.