இந்தியா, மே 10-
கவின் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வரும் ஸ்டார் படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய நடிகர் பற்றி பார்க்கலாம்.
சிவகார்த்திகேயனை தொடர்ந்து சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து ஹீரோவாக கலக்கி வருபவர் கவின். விஜய் டிவியில் கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி போன்ற தொடர்களில் நடித்த கவின், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான பின்னர் சினிமாவில் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் பிக்பாஸுக்கு பின் அவர் நடித்த லிஃப்ட் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இதையடுத்து கவின் நடிப்பில் உருவான திரைப்படம் தான் டாடா. கணேஷ் பாபு இயக்கிய இப்படத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருந்தார் கவின். கடந்த ஆண்டு திரைக்கு வந்த டாடா திரைப்படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றதோடு வசூலையும் வாரிக்குவித்தது. டாடா படத்தின் வெற்றிக்கு பின்னர் கவினின் மார்க்கெட், ஜெட் வேகத்தில் உயர்ந்ததோடு, அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கின.
தற்போது கவின் ஹீரோவாக நடித்து ஸ்டார் என்கிற திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் தான் இப்படத்தையும் இயக்கி உள்ளார். இதில் கவினுக்கு ஜோடியாக அதிதி போஹங்கர் நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இப்படம் இன்று உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தை பார்த்த பலரும் கவினின் நடிப்பை பாராட்டி வருகின்றனர். படத்துக்கும் பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

இந்த நிலையில், ஸ்டார் படத்தில் முதன்முதலில் ஹீரோவாக நடிக்க இருந்த நடிகர் பற்றி தற்போது பார்க்கலாம். அதன்படி ஸ்டார் படத்தில் முதன்முதலில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆனது நடிகர் ஹரிஷ் கல்யாண் தான். அவரை வைத்து போட்டோஷூட் எடுத்து போஸ்டரும் வெளியானது. ஆனால் சில காரணங்களால் அவர் இப்படத்தில் இருந்து விலகியதை அடுத்து அவருக்கு பதில் கவின் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி நடித்து அப்படம் ரிலீஸ் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.