இந்தியா, ஜூன் 12-
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். அவர் நடிப்பில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் அமரன். இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ரங்கூன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தான் இப்படத்தையும் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். இருவரும் இனைந்து பணியாற்றிய முதல் படம் இதுவாகும்.

அமரன் படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்து உள்ளார். இப்படம் மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்காக தீவிரமாக உடற்பயிற்சி செய்து கட்டுமாஸ்தான் உடற்கட்டுக்கு மாறி நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பை காஷ்மீரில் தான் நடத்தினர்.

அமரன் திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து அதன் பின்னணி பணிகள் ஜோராக நடைபெற்று வருகின்றன. இதனிடையே அப்படத்தின் ரிலீஸ் குறித்து அவ்வப்போது தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் இப்படம் ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டு வந்த நிலையில், பின்னணி பணிகள் முடிய தாமதம் ஆவதால் அமரன் படத்தின் ரிலீஸை வருகிற செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளனர்.
செப்டம்பர் மாதம் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதால் அதற்கு போட்டியாக அமரன் படம் ரிலீஸ் ஆகுமா என்கிற பேச்சு எழுந்து வந்தது. கோட் திரைப்படம் செப்டம்பர் 5-ந் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில், அம்மாத இறுதியில் அதாவது செப்டம்பர் 27-ந் தேதி தான் அமரன் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளார்களாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.