இந்தியா, ஜூன் 06-
மீண்டும் கோலிவுட்டில் பேய் சீசன் ஸ்டார்ட் ஆகிடுச்சு.. அரண்மனை 4 வெற்றிக்கு பின் காஞ்சனா 4 அப்டேட் தந்த லாரன்ஸ்
தமிழ் திரையுலகில் ஒரு காலகட்டத்தில் பேய் படங்களின் வரவு அதிகளவில் இருந்தது. காஞ்சனா தொடங்கி அரண்மனை, டிமாண்டி காலனி, தில்லுக்கு துட்டு என வரிசையாக ஹாரர் படங்களாக வெளியாகி பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்ததால், அந்த ஜானரிலேயே அதிகளவில் படங்கள் வரத் தொடங்கின. பின்னர் போகப்போக பேய் படங்களின் எண்ணிக்கை குறைந்தாலும் குறிப்பிட்ட சில படங்கள் மட்டும் அடுத்த பாகங்களாக வெளிவருகின்றன.
அந்த வகையில் அரண்மனை திரைப்படம் இதுவரை நான்கு பாகங்களாக வெளிவந்துள்ளது. தமிழ் சினிமாவில் முதன்முறையாக வெளிவந்த நான்காம் பாக திரைப்படமும் அரண்மனை தான். இதில் மூன்றாம் பாகத்தை தவிர மற்றும் 3 பாகங்களும் பிளாக்பஸ்டர் ஹிட்டாகின. அதிலும் அண்மையில் வெளிவந்த அரண்மனை படத்தின் நான்காம் பாகம் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.
அரண்மனையை போல் தமிழில் வெற்றிகரமாக அடுத்தடுத்த பாகங்களாக எடுக்கப்பட்டு வரும் மற்றொரு திரைப்படம் என்றால் அது காஞ்சனா திரைப்படம் தான். அப்படம் இதுவரை மூன்று பாகங்களாக வெளிவந்துள்ளது. இந்த மூன்று பாகங்களையும் ராகவா லாரன்ஸ் தான் இயக்கி இருந்தார். இதில் காஞ்சனா 2 மற்றும் 3-ம் பாகங்கள் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து இருந்தன.
கடைசியாக வெளிவந்த காஞ்சனா 3 படத்தின் இறுதியிலேயே அப்படத்தின் அடுத்த பாகம் வரும் என குறிப்பிட்டு இருந்தனர். ஆனால் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிப்பதில் பிசியானதால் கடந்த ஐந்து ஆண்டுகளாக அப்படம் பற்றி எந்த ஒரு அப்டேட்டும் வெளிவரவில்லை. இந்த நிலையில், தற்போது காஞ்சனா 4 படம் பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி அப்படத்தின் ஷூட்டிங் வருகிற செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளதாகவும், இந்த படத்திலும் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க உள்ளதோடு, அதனை இயக்கி தயாரிக்கவும் உள்ளார். அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு இப்படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.