Oct 20, 2025
Thisaigal NewsYouTube
மறு வெளியீட்டுக்கு தயாராகும் ரீ-எடிட் செய்யப்பட்ட அஞ்சான்
சினிமா

மறு வெளியீட்டுக்கு தயாராகும் ரீ-எடிட் செய்யப்பட்ட அஞ்சான்

Share:

இந்தியா, மார்ச் 29-

பெரிய படங்கள் இல்லாத இடைவெளியை பழைய படங்களின் மறுவெளியீடுகள் நிரப்பி வருகின்றன. பில்லா, காதலுக்கு மரியாதை, விண்ணைத்தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம் உள்பட இரண்டு டஜன் படங்கள் சமீபத்தில் மறுவெளியீடு கண்டன. அப்படி கார்த்தியின் பையா படத்தை சமீபத்தில் ஒரு திரையரங்கில் வெளியிட்டனர்.

பையா படத்தின் பாடல்களும், கார்த்தி, தமன்னாவின் ரொமான்டிக் நடிப்பும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தத் திரையிடலின் போது, படத்தை இயக்கிய லிங்குசாமியும் வந்திருந்தார். படம் முடிந்த பின் ரசிகர்களுடன் அவர் உரையாடினார்.

அப்போது பேசிய அவர், அஞ்சான் படத்தை ரீ - எடிட் செய்து மறுவெளியீடு செய்யவிருப்பதாக கூறினார். 2014 ல் சூர்யா, சமந்தா, வித்யுத் ஜம்வால் நடிப்பில் அஞ்சான் வெளியானது. படம் வெளியாகும் முன்பு கொடுத்த பேட்டியில், கத்துகிட்ட மொத்த வித்தையையும் இதில் (அஞ்சானில்) இறக்கியிருக்கேன் என்றார் லிங்குசாமி.

பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான படம் ரசிகர்களின் ஆதரவைப் பெறவில்லை. அவர்கள் லிங்குசாமி முன்பு சொன்ன ஸ்டேட்மெண்டை வைத்து அவரை ட்ரோல் செய்தனர். கைமீறிப்போன இந்த விமர்சனங்களால் தனது குழந்தைகள் பாதிக்கப்பட்டதை லிங்குசாமி வருத்தத்துடன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

அஞ்சான் படத்தின் அளவுக்கு மீறிய பட்ஜெட் மற்றும் அதன் தோல்வி காரணமாக லிங்குசாமியின் மீது விமர்சனங்கள் எழுந்தன. அதன் பிறகே அவர் இயக்கத்திலிருந்து ஒதுக்கப்பட்டார். அஞ்சானின் தோல்விக்கு பதில் சொல்லும்வகையில் ஒரு வெற்றியை அவரால் இதுவரை தர முடியவில்லை.

லிங்குசாமியின் திரைவாழ்க்கையில் அஞ்சானுக்கு எதிர்மறையாக பெரும் பங்குண்டு. அந்தப் படத்தைதான் ரீ - எடிட் செய்து வெளியிட இருக்கிறார். ‘இந்தப் படத்தையா நல்லாயில்லை என்று ஒதுக்கினோம்’ என இன்றைய இளைஞர்கள் படத்தை ஆரத்தழுவிக் கொண்டாலும் ஆச்சரியமில்லை.

Related News