இந்தியா,பிப்ரவரி 24 -
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஏ.வி. ராஜு என்பவர் அண்மையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய போது நடிகை திரிஷா மற்றும் நடிகர் கருணாஸ் குறித்து அருவருக்கத்தக்க வகையில் அவதூறாக பேசியிருந்தார். இந்த விவகாரம் கடும் சர்ச்சைகளை கிளப்பியது. பலரும் ஏ.வி. ராஜுவின் பேச்சுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர்.
ஏ.வி. ராஜுவின் பேச்சு பூதாகரமானதை தொடர்ந்து நடிகை திரிஷாவும் தனது கண்டனத்தை பதிவு செய்து வக்கீல் நோட்டீஸ் ஒன்றையும் அனுப்பினார். அதே போல் நடிகர் கருணாஸும் ஏ.வி. ராஜு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை கமிஷனர் அலுவலத்தில் புகார் செய்தார். இந்நிலையில் தன்னைப்பற்றி தவறான தகவல் பரப்பி வருவதாக பல யூடிப் சேனல்கள் மீதும் நடிகர் கருணாஸ் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக கருணாஸ் அளித்துள்ள புகார் மனுவில், 'நான் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவேன். திரைப்பட நடிகராகவும், தென்னிந்திய நடிகர் சங்கத்தில் துணை தலைவராகவும் மற்றும் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிறுவனத்தலைவராகவும் செயல்பட்டு வருகிறேன். இந்த சூழ்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தமிழா பாண்டியன் மற்றும் பயில்வான் ரங்கநாதன் ஆகிய இரு நபர்களும் வெவ்வேறு தனியார் பத்திரிகை பேட்டி மற்றும் சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி பல பொய்யான தகவலையும் மற்றும் சங்கதிகளையும் என் மீது வன்மம் கொண்டு அவதூறாக மற்றும் அருவருப்பான மற்றும் உண்மைக்கு மாறான செய்தியை பரப்பியுள்ளார்கள்.