தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ளார் நடிகை சாய் பல்லவி. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான அமரன் படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து பிரம்மாண்டமாக உருவாகி வரும் ராமாயணா படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சாய் பல்லவியின் அடுத்த தமிழ் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அமரன் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அடுத்ததாக நடிகர் தனுஷை வைத்து இயக்கப் போகும் படம் D55. இப்படத்திற்கு இதுவரை தலைப்பு வைக்கவில்லை.
இப்படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கதாநாயகியாக சாய் பல்லவியை நடிக்க வைக்கப் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. அமரன் படத்தைத் தொடர்ந்து மீண்டும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சாய் பல்லவி நடிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், மாரி 2 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார். மீண்டும் அதே ஹீரோ மற்றும் அதே இயக்குநருடன் சாய் பல்லவி கைகோர்ப்பாரா என்பதை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.








