இந்தியா, ஜூலை 8-
விஜய் சேதுபதி நடிப்பில், ஜூன் 14-ஆம் தேதி வெளியான ;மகாராஜா' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது அதிகார பூர்வமாக வெளியாகியுள்ளது.
இயக்குனர் நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் 'மகாராஜா'. விஜய் சேதுபதி முடி திருத்தும் தொழிலாளியாக நடித்திருந்த இந்த படம், கடந்த மாதம் (ஜூன்) 14-ஆம் தேதி வெளியானது. இப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 100 கோடி வசூல் சாதனையையும் படைத்தது.
பல நடிகர்களுக்கு அவர்களின் 50-ஆவது படம் 100-ஆவது படம் போன்றவை எதிர்பார்த்த வெற்றியை கொடுப்பதில்லை. அதனால் தான் நடிகர் தனுஷ் தன்னுடைய 50-ஆவது படத்தை இயக்கும் வாய்ப்பை கூட யாருக்கும் தராமல் அவரே இயங்குவதாகவும் கூறப்பட்டது. ஆனால் இது போன்ற சென்டிமெண்டுகளை உடைத்தெறிந்து மகாராஜாவாக உயர்ந்து நிற்கிறார் விஜய் சேதுபதி.
பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் கதைக்களம் பழசு தான் என்றாலும், இதனை கூறிய விதம், சீட் நுனியில் ரசிகர்களை அமரவைத்து காட்சிகள் ரசிகர்களின் மனதை கவர்ந்தது. மேலும் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றிய நிலையில், தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் அதிகார பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி விஜய் சேதுபதி நடித்துள்ள 'மகாராஜா ' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில், ஜூலை 12-ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பில் ’லட்சுமி காணாமல் போனதும், மகாராஜாவோட வாழ்க்கை தலைகீழாய் ஆயிருச்சு, தன்னுடைய வீட்டு சாமியை திருப்பிக் கொண்டு வர, மகாராஜா எவ்வளவு தூரம் போறாரு’ என்ற கேப்ஷனையும் பதிவு செய்துள்ளனர். திரையரங்கில் பார்க்காத ஓடிடி ரசிகர்களுக்கு இந்த வாரம் மகாராஜா அவர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் விதத்தில் ஒரு உணர்வு பூர்வமான படைப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.








