கோலாலம்பூர், ஜூலை.25-
ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாகத் தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் ஆகஸ்ட் 2 ஆம் தேதியிலிருந்து அச்சமில்லை அச்சமில்லை எனும் சிந்தனையைத் தூண்டும் தமிழ் விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பாகவிருக்கிறது.
திருமணம், குழந்தைகள் மேம்பாடு, தொழில்நுட்பத்தின் தாக்கம், சமூக ஊடக உத்வேகங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கியச் சமூகம் சார்ந்த மற்றும் நிஜ வாழ்க்கைத் தலைப்புகளை ஆராய்வதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், விமர்சனச் சிந்தனையை ஊக்குவித்தல் மற்றும் நேர்மறையான மாற்றத்தை ஊக்குவித்தல் ஆகியவற்றை இந்த விவாத நிகழ்ச்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரபல இந்திய நடிகைத், தொலைக்காட்சி தொகுப்பாளினி மற்றும் கொடையாளர் கௌதமி அவர்கள் தொகுத்து வழங்கும் அச்சமில்லை அச்சமில்லை, பொதுமக்கள் மற்றும் உள்ளூர் கலைஞர்களைக் கொண்ட இரண்டு விவாதக் குழுக்களைத் தாங்கி மலரும்.
மேலும், தங்கள் துறையில் புலமைப் பெற்ற நிபுணர்கள், உண்மையானத் தகவல்கள் மற்றும் தனிப்பட்ட நுண்ணறிவுகளால் ஆதரிக்கப்படும் தங்கள் கருத்துகளையும் கண்ணோட்டங்களையும் பகிர்ந்து கொள்ள இந்நிகழ்ச்சியில் இணையவிருக்கின்றனர்.