இந்தியா, ஜூன் 13-
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் மாதத்தில் இருந்து செப்டம்பருக்கு தள்ளிப்போகிறதாம்.
தெலுங்கு திரையுலகில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் புஷ்பா. சுகுமார் இயக்கிய இப்படம் கடந்த 2021-ம் ஆண்டு திரைக்கு வந்து அதிரி புதிரியான வெற்றியை ருசித்தது. பான் இந்தியா அளவில் ஹிட் அடித்த இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.350 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. புஷ்பா படத்தின் வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
புஷ்பா 2 திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும், வில்லனாக பகத் பாசிலும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. புஷ்பா படத்தை போல் புஷ்பா 2 படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைக்கிறார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. முதல் பாகத்தை காட்டிலும் மிக பிரம்மாண்டமாக புஷ்பா 2 திரைப்படம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

புஷ்பா 2 திரைப்படத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் 15ந் தேதி திரைக்கு கொண்டு வர உள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது. அண்மை காலங்களில் முன்கூட்டியே ரிலீஸ் தேதியை அறிவிக்கும் படங்கள் ஒவ்வொன்றாக தள்ளிவைக்கப்படுகின்றன. அந்த வகையில் இந்தியன் 2, கல்கி, ராயன் போன்ற படங்களின் ரிலீஸ் தேதி தொடர்ந்து மாற்றப்பட்டு வந்த நிலையில், அந்த நிலைக்கு தற்போது புஷ்பா 2 திரைப்படமும் தள்ளப்பட்டு உள்ளது.
அதன்படி ஆகஸ்ட் மாதத்தில் இருந்து புஷ்பா 2 படத்தை செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்க படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செப்டம்பரின் தொடக்கத்தில் விஜய்யின் கோட் படம் ரிலீஸ் ஆவதால் அதனுடன் போட்டியிடாமல் அம்மாத இறுதியில் அதாவது செப்டம்பர் 27ந் தேதி அப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. புஷ்பா 2 படத்தின் பிசினஸ் எதிர்பார்த்த அளவு இல்லாததால் தான் இந்த ரிலீஸ் தேதி மாற்றம் நடப்பதாக தகவல் கசிந்துள்ளது.