Sep 25, 2026
Thisaigal NewsYouTube
பெஸ்டிநெட் நிறுவனர் அமினுலை நாடு கடத்தும் கோரிக்கை விடுக்கப்படவில்லை - உள்துறை அமைச்சர் தகவல்
தற்போதைய செய்திகள்

பெஸ்டிநெட் நிறுவனர் அமினுலை நாடு கடத்தும் கோரிக்கை விடுக்கப்படவில்லை - உள்துறை அமைச்சர் தகவல்

Share:

பெஸ்டினெட் நிறுவனத்தின் தலைவர் அமினுல் இஸ்லாம் அப்துல் நூர்-ஐ நாடு கடத்தி தங்களிடம் ஒப்படைக்குமாறு வங்காள தேச அரசாங்கமோ அல்லது மலேசியாவிலுள்ள அதன் தூதரகமோ இதுவரை எந்த ஓர் அதிகாரப்பூர்வ கோரிக்கையும் விடுக்கவில்லை என்று உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுதியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் அவர் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், மலேசியாவும், வங்காள தேசமும் குற்றவாளிகளை நாடுகடத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால், 1992 ஆம் ஆண்டின் குற்றவாளிகள் நாடு கடத்தும் சட்டத்தின்படி, வங்காள தேச அரசாங்கம், மலேசிய உள்துறை அமைச்சிடம் முறையான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குற்றவாளிகளை நாடுகடத்துவது தொடர்பான அனைத்து சட்ட நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே, சம்பந்தப்பட்ட நபரை ஒப்படைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க முடியும் என்றும் சைஃபுதீன் நசுதியோன் இஸ்மாயில் விளக்கமளித்துள்ளார்.

பணமோசடி, மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் புலம்பெயர் தொழிலாளர் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ள, மலேசியாவில் பதுங்கி இருக்கும் அமினுல் மற்றும் தொழிலதிபர் ருஹுல் அமீன் ஆகிய இருவரையும் நாடு கடத்துமாறு, கடந்த 2024-ஆம் ஆண்டு வங்காள தேச போலீஸார் கோரிக்கை விடுத்திருந்ததனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News