கோலாலம்பூர், ஜனவரி.05-
மலேசியத் தரைப்படையின் குத்தகைகளில் நிலவும் லஞ்ச ஊழல் முறைகேடுகள் தொடர்பாக, சுமார் 26 நிறுவனங்களிடம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
தரைப்படைக்குத் தேவையான தளவாடங்கள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கான குத்தகைகளைப் பெறுவதற்கு, சில நிறுவனங்கள் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இந்த முறைகேடு தொடர்பாக கடந்த வாரம் தரைப்படையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் உட்பட 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து சுமார் 10 லட்சம் ரிங்கிட் ரொக்கம் மற்றும் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குத்தகை நடைமுறைகளில் முறையற்ற வழிகளில் நுழைந்ததாகக் கருதப்படும் 26 தனியார் நிறுவனங்களின் ஆவணங்களை எஸ்பிஆர்எம் அதிகாரிகள் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிறுவனங்களின் இயக்குநர்கள் மற்றும் பங்குதாரர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாக எஸ்பிஆர்எம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.








