Sep 27, 2026
Thisaigal NewsYouTube
கூலிம் போலீஸ் கைது நடவடிக்கை சர்ச்சை: விதிமுறைகளை மீறிய அதிகாரியின் மீது அதிரடி விசாரணை!
தற்போதைய செய்திகள்

கூலிம் போலீஸ் கைது நடவடிக்கை சர்ச்சை: விதிமுறைகளை மீறிய அதிகாரியின் மீது அதிரடி விசாரணை!

Share:

மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரைப் போலீசார் பிடித்து இழுத்துக் கைது செய்யும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட போலீசார் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கூலிம் நகரின் ஜாலான் துங்கு புத்ரா பகுதியில், நடந்த இந்தச் சம்பவம் குறித்து விளக்கம் அளித்த கூலிம் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் தெங்கு முகமட் பைசல் தெங்கு யெங் கைது நடவடிக்கையின் போது SOP வழிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து அரச மலேசிய போலீஸ் படையின் ஒழுக்கக் கட்டுப்பாட்டுப் பிரிவு விசாரணை நடத்தும் என்று தெரிவித்தார்.

வைரலான அந்த 29 வினாடி காணொளியில், மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே தள்ளப்பட்ட நபரின் தலையைப் போலீஸ் அதிகாரி ஒருவர் மிதிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. விசாரணை முடியும் வரை சம்பந்தப்பட்ட அந்த அதிகாரி நிர்வாகப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அதே வேளையில், பிடிபட்ட அந்த நபர் போலீசாரின் மோட்டார் சைக்கிளை உதைத்துவிட்டு, ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தித் தப்பிக்க முயன்றதாகவும், அவரிடமிருந்து கெத்தும் நீர் பறிமுதல் செய்யப்பட்டதோடு சிறுநீர் பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது உறுதி செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த நபர், வரும் வியாழக்கிழமை வரை 3 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related News