கூச்சிங்கில் ஆசிரியர் ஒருவர் மாணவரால் தாக்கப்பட்ட சம்பவம் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட போது, அதனை முன்கூட்டியே தடுக்கத் தவறிய விவகாரம் குறித்து மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி, ஃபேஸ்புக் நிறுவனத்திடம் விசாரணை நடத்தி வருகின்றது.
இது குறித்து நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சீல், இச்சம்பவம் குறித்து போலீசாருடன் இணைந்து எம்சிஎம்சி விசாரணை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வன்முறைச் சம்பவங்கள் சமூக ஊடகங்களில் நேரலையாக ஒளிபரப்பப்படுவதைத் தடுக்கத் தவறும் விவகாரம் புதிதல்ல என்றும், இது போன்ற சம்பவங்கள் பல்வேறு நாடுகளிலும் ஏற்கெனவே நிகழ்ந்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அதேவேளையில் இந்த விவகாரம் குறித்து விசாரணை முடிவடையும் வரை தாம் மேற்கொண்டு கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும், உரிய நேரத்தில் அறிக்கை வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








