மலேசியாவில் உருவாக்கப்பட்ட தூஜு வழிகாட்டிச் செயலி, பயனர்களின் இருப்பிடத் தரவுகளை எவ்வாறு பாதுகாக்கிறது என்பதை அரசாங்கம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும், அச்செயலி பாதுகாப்பானது என்பதற்கான ஆதாரங்களை வழங்க வேண்டும் என்றும் தொழில்நுட்ப வழக்கறிஞர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
தூஜு செயலியின் தனியுரிமைக் கொள்கை தொடர்ந்து கவலைகளை எழுப்புவதாகக் குறிப்பிட்ட வழக்கறிஞர் ஃபூங் செங் லியோங், பயனர்களின் இருப்பிடத் தரவுகள் சேகரிக்கப்பட்டு, வரைபடச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுடன் பகிரப்படுவதாக அந்தக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டினார்.
இத்தகவல்கள் அடையாளம் காண முடியாத வகையிலும், தொகுக்கப்பட்ட தரவுகளாகவும் பகிரப்படுவதாக தூஜு செயலியின் தனியுரிமைக் கொள்கை குறிப்பிட்டாலும், உண்மையில் எந்த வகையான தகவல்கள் அந்த நிறுவனங்களுடன் பகிரப்படுகின்றன? அவை எங்கு சேமிக்கப்படுகின்றன? அவற்றை யார் அணுக முடியும்? போன்றவை குறித்து தெளிவான விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.








