கடந்த திங்களன்று நெகிரி செம்பிலான், ஜெம்போலில் உள்ள கிலோமீட்டர் 1 ஜாலான் பகாவ் - ஜுவாசே யில் விபத்து ஏற்படக் காரணமாக இருந்த தமது 15 வயது மகனை வாகனமோட்ட அனுமதித்த தந்தைக்கு எதிராக காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இது குறித்து தகவல் வெளியிட்ட ஜெம்போல் மாவட்டக் காவல் துறை சுரிந்தென்டன் ஹூ சாங் ஹூக் தெரிவிக்கயில், வயது குறைந்தவரை வாகனமோட்ட அனுமதித்தக் குற்றத்திற்காக 1987 சாலைப் போக்குவரத்து சட்டத்தின்படி அந்த சம்மன் வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்த விபத்து குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சம்பவம் நடந்த இரவு 10.15 மணி அளவில் அந்த 15 வயது சிறுவன் நிசான் அல்மேரா வகை காரை ஜுவாசேவில் இருந்து பகாவ்வை நோக்கி தனியே ஓட்டிச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த அந்தக் கார் சாலையில் இடது பக்கமாக இருந்த தடுப்பில் மோதியது.
பின்னர் சாலை ஓரத்தில் உள்ள விளக்குக் கம்பத்தையும் மோதியதில் அந்தக் கம்பம் வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்களின் மீது விழுந்ததாக ஹூ சாங் ஹூக் தெரிவித்தார்.
அந்தச் சிறுவன் ஓட்டி வந்த கார் பெருத்த சேதத்திற்கு இலக்கான வேலையில் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை.
இந்த விபத்தைக் குறிப்பிட்டு, சாலைப் பயனர்கள் எப்பொழுதும் சாலைப் விதிமுறைகளை சரியாகப் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
முறையான ஓட்டுநர் உரிமம் இல்லாமல் தங்கள் பிள்ளைகள் வாகனத்தைச் செலுத்த பெற்றோர் அனுமதிக்கக் கூடாது என அவர் மேலும் சொன்னார்.








