முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி கோபால் ஸ்ரீ ராமுக்கு செலுத்தப்பட்ட 2 லட்சம் ரிங்கிட் வழக்கு செலவுத் தொகைக் கட்டணத்தைத் திரும்பப் பெறக் கோரி தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரிய அவரது மனைவி சந்திரா ஸ்ரீ ராமின் விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இவ்வழக்கின் பிரதிவாதியான கூ கீ தாட்டின் கோரிக்கை அடிப்படையற்றது என்று உடனடியாகக் கூற முடியாது என்றும், இந்த வழக்கு முழுமையான விசாரணைக்குச் செல்ல வேண்டும் என்றும் நீதிபதி அலிஸ் லோக் தீர்ப்பளித்தார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு தனது மகன் அன்ரியன் கோவின் அப்பீல் நீதிமன்ற குற்றவியல் வழக்குக்காக கோபால் ஸ்ரீ ராமை தலைமை வழக்கறிஞராக கூ கீ தாட் நியமித்திருந்தார்.
மொத்தம் 3 லட்சத்து 49 ஆயிரத்து 800 ரிங்கிட் சட்டக் கட்டணம் கோரப்பட்ட நிலையில், கூ கீ தாட் 2 லட்சம் ரிங்கிட் செலுத்தியிருந்தார். ஆனால், மேல்முறையீட்டு வழக்கு முடிவடைவதற்கு முன்பே கோபால் ஸ்ரீ ராம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 29-ஆம் தேதி காலமானார்.
இதனால், முழுமையான சட்டச் சேவை வழங்கப்படவில்லை எனக் கூறி 2 லட்சம் ரிங்கிட்டைத் திரும்பக் கோரி கூ கீ தாட் வழக்கு தொடுத்துள்ளார். எனினும் அவரின் விண்ணப்பத்தை நிராகரிக்க கோரி, கோபால் ஸ்ரீ ராமின் துணைவியார் சந்திரா ஸ்ரீ ராம் எதிர்மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.








