மற்றொரு பெண்ணின் அடையாள ஆவணத்தைப் பயன்படுத்தி தனியார் மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்து, அந்தக் குழந்தையை விற்பனை செய்ய முயன்றதாகக் கூறப்படும் கும்பலை கெடா போலீசார் முறியடித்துள்ளனர்.

கெடா மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ அட்ஸிலி அபு ஷா வெளியிட்ட அறிக்கையில், இந்த நடவடிக்கையில் 4 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

திருமணத்திற்கு வெளியே கர்ப்பமான பெண்ணின் அடையாளத்தை மறைக்க, மற்றொரு பெண்ணின் அடையாள ஆவணம் பயன்படுத்தப்பட்டதாக ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான ஆண், மருத்துவச் செலவுக்காக 9 ஆயிரம் ரிங்கிட்டும், குழந்தையின் தாய்க்கு 8 ஆயிரம் ரிங்கிட்டும் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

மீட்கப்பட்ட புதிதாகப் பிறந்த ஆண் குழந்தை, தற்போது சுங்கை பட்டாணி சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனையில் பாதுகாப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம், குழந்தை கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை அல்லது குறைந்தது 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று டத்தோ அட்ஸிலி அபு ஷா சுட்டிக் காட்டினார்.








