சிரம்பான், ஜனவரி.28-
சிரம்பானில் தனது தாயாரால் மறந்து விடப்பட்டு, 9 மணி நேரமாக காரினுள் இருந்த இரண்டு வயது ஆண் குழந்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது.
நேற்று காலை 8 மணியளவில் வேலைக்குச் செல்லும் அவசரத்தில், குழந்தையைக் காரினுள் மறந்து விட்டு சென்ற அதன் தாயார், மாலை 5 மணியளவிலேயே குழந்தையைப் பற்றிய நினைவுக்கு வந்துள்ளார்.
இதனிடையே, மாலை 6.15 மணியளவில் பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், கார் நிறுத்துமிடத்திற்குச் சென்ற போலீசார், சுயநினைவிழந்த நிலையில் கிடந்த அக்குழந்தையை மீட்டுள்ளனர்.
வழக்கமாகக் காலையில் குழந்தைப் பராமரிப்பாளரிடம் தனது குழந்தையை ஒப்படைத்து விட்டு வேலைக்குச் செல்லும் அவர், நேற்று அதனைச் செய்ய மறந்து விட்டதாக நம்பப்படுகின்றது.
இந்நிலையில், குழந்தையைப் புறக்கணித்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக அந்தத் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதே வேளையில், உயிரிழந்த குழந்தையின் உடல், பிரேதப் பரிசோதனைக்காக ரெம்பாவ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.








