கோலாலம்பூர், ஜனவரி.28-
கடந்த ஆண்டு, நவம்பர் மாதம், மலாக்கா டுரியான் துங்காலில், மூன்று இந்திய இளைஞர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையில், தடயவியல் மற்றும் துப்பாக்கிச் தோட்டா தொடர்பான ஆய்வறிக்கைக்காகக் காத்திருப்பதாக நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு தொடர்பான விசாரணை ஆவணங்கள், கடந்த டிசம்பர் 16 மற்றும் டிசம்பர் 29-ஆம் தேதிகளில், சட்டத்துறை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
முழுமையான ஆய்வறிக்கைகள் கிடைத்தவுடன் இவ்வழக்கில் இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அவர் நாடாளுமன்றத்தில் தனது எழுத்துப்பூர்வ பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிச் செய்ய அரசாங்கம் என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என கோத்தா பாரு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ தக்கியுடின் ஹசான் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்குப் பதிலளித்த சைஃபுடின் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்வழக்கு விசாரணைகளில் நீதியை நிலைநாட்டுவதற்கும், அமலாக்க முகமைகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பதற்கும் அரசாங்கம் நிச்சயம் அதன் கடமையை ஆற்றும் என்றும் சைஃபுடின் உறுதியளித்துள்ளார்.
இந்த வழக்கானது தொடக்கத்தில் 'கொலை முயற்சி' எனப் போலீசார் வகைப்படுத்தியிருந்தனர்.
இருப்பினும், போலீசாரின் பரிந்துரைகள் மற்றும் குடும்பத்தினரின் புகார்களைத் தொடர்ந்து, சட்டத்துறை அலுவலகமான AGC, கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி இந்த வழக்கை, 'கொலை' குற்றவியல் சட்டப் பிரிவான 302 கீழ் மறுவகைப்படுத்தி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.








