Jan 27, 2026
Thisaigal NewsYouTube
மனித வள அமைச்சின் கீழ் மித்ரா: பிரதமருக்கு டத்தோ ஶ்ரீ ரமணன் நன்றி
தற்போதைய செய்திகள்

மனித வள அமைச்சின் கீழ் மித்ரா: பிரதமருக்கு டத்தோ ஶ்ரீ ரமணன் நன்றி

Share:

கோலாலம்பூர், ஜனவரி.27-

மித்ராவை மனிதவள அமைச்சுக்கு மாற்றும் முடிவிற்கு அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த மிகப் பெரிய பொறுப்பையும் நம்பிக்கையையும் வழங்கிய பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அமைச்சரவைக்கு தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக மனித வள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன் தெரிவித்தார்.

இந்தியர்களின் உருமாற்றுப் பிரிவான மித்ரா, இதற்கு முன்பு பிரதமர் துறை அமைச்சின் கீழ் இருந்தது. தற்போது தமது தலைமையான மனித வள அமைச்சுக்கு இடம் மாற்றப்பட்டு இருப்பது, இந்தியச் சமூகத்திற்கான திட்டமிடல், அமலாக்கம் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மடானி அரசாங்கத்தின் மனித மூலதன மேம்பாட்டு சூழலமைப்பிற்கு ஏற்ப, மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த முறையில் முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ரமணன் குறிப்பிட்டார்.

இன்று புத்ராஜெயாவில் மித்ராவின் தர்ம மடானி திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக மொத்தம் 155 ஆலயங்களுக்கு தலா 20 ஆயிரம் ரிங்கிட் வழங்கும் நிகழ்வில் டத்தோ ஶ்ரீ ரமணன் இதனைத் தெரிவித்தார்.

இந்த 155 ஆலயங்களுக்காக முதற்கட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட மொத்தத் தொகை 3.1 மில்லியன் ரிங்கிட் ஆகும் டத்தோ ஶ்ரீ ரமணன் அறிவித்தார்.

இதனிடையே தலா 20ஆயிரம் ரிங்கிட் மானியத்தைப் பெற்றுக் கொண்ட ஆலயப் பொறுப்பாளர்களில் ஒருவரான ரவாங், ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் தலைவர் டத்தோ ஶ்ரீ பாலகிருஷ்ணன் அப்பளநாயுடு கூறுகையில் , மனித வள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணனுக்கும், மித்ராவின் நிர்வாக இயக்குநர் பிரபாகரனுக்கும் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்த 20 ஆயிரம் நிதி உதவியின் மூலம் ஆலயத்தில் சமய வகுப்பு, பரதநாட்டியப் பயிற்சி மற்றும் சமயம் சார்ந்த நிகழ்வுகளை நடத்துவதற்கு தங்களுக்கு பெரும் துணையாக இருக்கும் என்று பேரா, தெலுக் இந்தான் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய அமைப்பின் பொறுப்பாளர் ஜெகதீசன் தெரிவித்தார்.

இந்த நிதி உதவியைப் பெற்ற ஆலயப் பொறுப்பாளர்கள், அதன் நோக்கத்திற்கு ஏற்ப சமயம் சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டும். அதற்கான முறையான சான்றுகளை மித்ராவிடம் சமர்ப்பிக்கும் பட்சத்தில், அந்த ஆலயங்களுக்குத் தேவையான அடுத்தக் கட்ட உதவிகளை வழங்க மித்ரா உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று டத்தோ ஶ்ரீ ரமணன் தமது உரையில் தெரிவித்தார்.

Related News