கூலாய், ஜனவரி.27-
மலேசியாவில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயதை 16 ஆக நிர்ணயிக்கும் திட்டத்தை வரும் ஜூலை மாதம் முதல் அமல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் துணைத் தகவல் தொடர்பு அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்துள்ளார்.
சிறார்களை இணையவழிச் சுரண்டல் மற்றும் பொருத்தமற்ற உள்ளடக்கங்களிலிருந்து பாதுகாப்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும் என்று துணை அமைச்சர் விளக்கினார்.
சிறந்த மற்றும் பாதுகாப்பான முறையில் பயனர்களின் வயதைச் சரி பார்ப்பது குறித்து சமூக ஊடக நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. ஜூன் மாத இறுதிக்குள் டிஜிட்டல் அடையாளச் சரிபார்ப்பு முறையைக் கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தத் திட்டம், 'ஒழுங்குமுறை சாண்ட்பாக்ஸ்' (Sandbox) கட்டத்தில் உள்ளது. இதன் மூலம் முழுமையாகச் செயல்படுத்துவதற்கு முன்பு, அமலாக்க முறைகளை அதிகாரிகள் சோதித்துப் பார்ப்பார்கள் என்று தியோ நீ சிங் விளக்கினார்.
நேற்று ஜோகூரில் நடைபெற்ற பள்ளி ஆரம்ப கால உதவித் தொகை வழங்கும் விழாவில் பேசிய அவர், கல்வி அமைச்சின் மூலம் இந்த ஆண்டு 800 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.








