கோலாலம்பூர், ஜனவரி.27-
கடந்த 2025-ஆம் ஆண்டில் நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் 270 போதைப் பொருள் கடத்தல் கும்பல்கள் முறியடிக்கப்பட்டு, அவற்றின் 737 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
2024-இல் 236 கும்பல்கள் முறியடிக்கப்பட்டு 714 பேர் கைதான நிலையில், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது என்று ஐஜிபி தெரிவித்தார்.
2025-இல் சுமார் 3.19 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது 2024-ஆம் ஆண்டின் பறிமுதல் மதிப்பைக் 388 மில்லியன் ரிங்கிட்டை காட்டிலும் சுமார் 8 மடங்கு அதிகம் என்று ஐஜிபி சுட்டிக் காட்டினார்.
நாட்டில் செயல்பட்டு வந்த 21 சட்டவிரோத போதைப் பொருள் தயாரிப்பு ஆய்வகங்களை போலீஸ் துறையினர் கண்டுபிடித்து முடக்கியுள்ளனர் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் காலிட் இஸ்மாயில் இதனைத் தெரிவித்தார்.
2024-இல் இந்த எண்ணிக்கை 12-ஆக மட்டுமே இருந்தது. போதைப் பொருள் கும்பல்களுக்குச் சொந்தமான சுமார் 144 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சொத்துக்களைப் போலீசார் முடக்கியுள்ளனர். இதில் 31 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் ஏற்கனவே அரசுடைமையாக்கப்பட்டுள்ளன என்று ஐஜிபி விளக்கினார்.








