தம்பின், ஜனவரி.27-
நெகிரி செம்பிலான், தம்பினில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் பெண் ஒருவரை ரகசியமாக ஆபாசமாகப் படம் பிடித்ததாக நம்பப்படும் 26 வயது மதிக்கத்தக்க அரசு ஊழியர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று மாலை 3.46 மணியளவில் 34 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தம்பின் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தான் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த போது, ஒரு மர்ம நபர் தன்னைத் தொடர்ந்து வந்து, ஆபாசமான முறையில் ரகசியமாகப் படம் பிடித்ததாக அவர் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார் என்று தம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் அமிருடின் சரிமான் தெரிவித்தார்.
அந்த மாதுவின் புகாரைத் தொடர்ந்து விரைந்து செயல்பட்ட போலீசார், கம்போங் பாரு தம்பின் பகுதியில் அந்தச் சந்தேக நபரை இன்று கைது செய்தனர்.
விசாரணைக்கு ஏதுவாக அந்த நபர், மூன்று நாட்களுக்கு போலீஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பெண்ணின் கண்ணியத்திற்கு இழுக்கை ஏற்படுத்தியதாக குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த நபர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக அமிருடின் சரிமான் மேலும் விவரித்தார்.








