கோலாலம்பூர், ஜனவரி.27-
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே அதிகரித்து வரும் மோதல் போக்கு குறித்து பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தச் சூழல் ஒரு திறந்தவெளி போராக மாறினால், அது மத்திய கிழக்கு நாடுகளிலும் அதற்கு அப்பாலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
இரு நாடுகளும் தங்களின் ராணுவ வலிமையைப் பெருக்கி வருவதும், ஆக்ரோஷமான பேச்சுக்களும், மிகவும் அவசியமான இந்த நேரத்தில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதற்கான வாய்ப்புகளைக் குறைத்து விட்டதாக அன்வார் தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நிலையற்றதாக இருக்கும் இந்தச் சூழல், எந்த நேரத்திலும் ஒரு நேரடிப் போராக மாறக்கூடிய ஆபத்து இருப்பதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
வாஷிங்டன் மற்றும் தெஹ்ரான் இடையிலான எந்தவொரு மோதலும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பின்மை, பொருளாதார அதிர்ச்சிகள் மற்றும் பிற நாடுகளுக்கும் பரவக்கூடிய நீண்ட காலப் பாதிப்புகளை உருவாக்கும் என்று பிரதமர் எச்சரித்தார்.
எந்தவொரு வியூக நலனும் இத்தகைய மனித உயிர்ச் சேதத்திற்கும் பொருள் அழிவிற்கும் நியாயமாக இருக்க முடியாது என்றும் அன்வார் மிக அழுத்தமாகக் கூறியுள்ளார்.








