கிள்ளான், ஜனவரி.27-
கிள்ளான், ஜாலான் தாப்பாவில் இரண்டு வாரங்களுக்கு முன்பு போலீஸ் அதிகாரி போல் நடித்து, ஒரு பெண்ணைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அவரிடமிருந்து கொள்ளையடித்த புகாரில் 32 வயது பி-ஹெய்லிங் ஊழியர் ஆர். சத்தியசீலன் மற்றும் அவரது நண்பர் மீது கிள்ளான் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 18-ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில், வாகன நிறுத்துமிடத்தில் 37 வயது மதிக்கத்தக்க பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அவருக்குக் காயம் ஏற்படுத்தியதாக சத்தியசீலன் மீது தனியாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 10 முதல் 30 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் பிரம்படியும் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்த்தின் கீழ் சத்தியசீலன் குற்றஞ்சாட்டப்பட்டார்.
சத்தியசீலனும் அவரது நண்பரான 34 வயது எம். பாலராஜும் இணைந்து அதே பெண்ணின் கைப்பை மற்றும் உடைமைகளைக் கொள்ளையடித்ததாக மற்றொரு கூட்டுக்குற்றம் சாட்டப்பட்டது.
இருவரும் தங்களை போலீஸ் அதிகாரிகள் என்று பொய் கூறி, கடமையில் இருப்பது போல் நடித்து அந்தப் பெண்ணை மிரட்டியதற்காகவும் தனி வழக்குப் பதிவுச் செய்யப்பட்டது. நீதிபதி Sharifah Hascindie மற்றும் மஜிஸ்திரேட் கார்த்தியாயினி ஆகியோர் முன்னிலையில் நிறுத்தப்பட்ட இருவரும் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்.








