தங்காக், அக்டோபர்.25-
ஜோகூர், தங்காக், பண்டார் பாரு சாகில் அருகில் ஜாலான் மூவார் – செகாமாட் சாலையின் 32.5 ஆவது கிலோ மீட்டரில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு கார் சம்பந்தப்பட்ட கோர விபத்தில் 18 வயது பெண் உட்பட நால்வர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் நேற்று இரவு 10.20 மணியளவில் நிகழ்ந்ததாக தங்காக் மாவட்ட போலீஸ் தலைவர் ரொஸ்லான் தாலிப் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்கள் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்தியவர்கள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து சென்றவர்கள் என்று அவர் விளக்கினார்.
இவ்விபத்தில் கடும் காயங்களுக்கு ஆளான மூவர், சம்பவ இடத்திலேயே மாண்டனர். நான்காவது நபர், தங்காக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டார்.
மோட்டார் சைக்கிள்களை மோதித் தள்ளியதாகக் கூறப்படும் கார் ஓட்டுநர் மற்றும் பயணிகள் யாரும் காயம் அடையவில்லை என்று ரொஸ்லான் தாலிப் தெரிவித்தார்.








