மேல்முறையீட்டை அங்கீகரித்தது உள்துறை அமைச்சு
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பதிவு ரத்து செய்யப்பட்ட டான்ஸ்ரீ எம். கேவியஸ் தலைமையிலான மைபிபிபி கட்சியின் சட்டப்பூர்வமானத் தலைவர் முன்னாள் துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ மாக்லின் டி'க்ரஸ் என்று உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
மைபிபிபி கட்சியின் பதிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து செய்து கொள்ளப்பட்ட மேல்முறையீட்டில், பழம்பெரும் கட்சியான மைபிபிபி யின் தலைமைத்துவத்திற்குச் சட்டப்பூர்வமானத் தலைவர் டத்தோ ஶ்ரீ மாக்லின் டி'க்ரஸ் என்று உள்துறை அமைச்சு அங்கீகரித்துள்ளது.
மைபிபிபி கட்சியின் சட்டப்பூர்வத் தலைவர் யார் என்று டான்ஸ்ரீ கேவியஸ் தலைமையிலான அணியினருக்கும், மாக்லின் டி'க்ரஸ் தலைமையிலான அணியினருக்கும் இடையில் தலைமைத்துவப் போராட்டம் வெடித்ததைத் தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி மைபிபிபி கட்சியின் பதிவை சங்கங்களின் பதிவு அலுவலகமான ஆர்.ஓ.எஸ். ரத்து செய்தது.
எனினும் மைபிபிபி கட்சியின் சட்டப்பூர்வமானத் தலைவர் மாக்லின் டி'க்ரஸ் என்று உள்துறை அமைச்சு அறிவித்து இருப்பது மூலம் அக்கட்சியின் தலைமைத்துவப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. நேற்று ஏப்ரல் 11 ஆம் தேதி உள்துறை அமைச்சு தங்களுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இதனை தெரிவித்துள்ளதாக முன்னாள் தகவல், பல்லூடகத்துறை துணை அமைச்சருமான மாக்லின் டி'க்ரஸ் ஓர் அறிக்கையின் வழி தெரிவித்துள்ளார்.








