சிரம்பான் செந்தாயான்-இல் உள்ள மேல்நிலைப் பள்ளி ஒன்றில், நேற்று வெள்ளிக்கிழமை காலை, கட்டிடத்தின் மேல் தளத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த நான்காம் படிவ மாணவியின் குடும்பத்தினருக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
தானும், தனது மனைவி டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலும், இச்சம்பவத்தை அறிந்து மிகவும் வருந்தியதாகவும், அம்மாணவியின் குடும்பத்தினருக்காக பிரார்த்தனை செய்வதாகவும் அன்வார் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கும், பள்ளியைச் சேர்ந்தவர்களுக்கும் தேவையான உதவிகள் மற்றும் உளவியல் ஆலோசனைகளை கல்வி அமைச்சு உடனடியாக ஏற்பாடு செய்துள்ளதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.
நேற்று காலை 10.48 மணியளவில், போலீசாருக்குக் கிடைத்த தகவலின் படி, பள்ளியின் கீழ்தளத்தில் அம்மாணவி சுயநினைவிழந்த நிலையில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற மருத்துவக் குழு, மாணவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தியது.
இந்நிலையில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இச்சம்பவத்தில் பகடிவதை தொடர்பான எந்த அறிகுறிகளும் கண்டறியப்படவில்லை என்று கல்வி இலாகாவின் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முகமது ஆசாம் அகமது தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.








