மலேசியாவில் அகதிகளாக வாழ்ந்து வரும் ரோஹிங்கியா சமூகத்தினர், மலேசிய குடியுரிமை கோருவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ரோஹிங்கியா உலாமா மன்றம் மறுத்துள்ளது.
ரோஹிங்கியா சமூகத்தினருக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் நோக்கில் இந்த குற்றச்சாட்டுகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளதாக அம்மன்றத்தின் தலைவர் ரஹிமுல்லா உசேன் தெரிவித்துள்ளார்.
அக்குற்றச்சாட்டுகள் மலேசியாவில் ரோஹிங்கியா மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிப்பதாகவும் அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் சமூக ஊடகங்களில் பரவி வரும் பதிவு ஒன்றில், ரோஹிங்கியா அகதிகள் தங்களை மலேசிய குடிமக்களாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுவதற்குப் பதிலளிக்கும் வகையில் ரஹிமுல்லா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
மேலும், ரோஹிங்கியா சமூகத்தினர் தங்களது சொந்த நாட்டான மியன்மாரில் சட்டப்பூர்வ குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்காகவே நீண்டகாலமாக போராடி வருவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








