குவாந்தான், டிசம்பர்.02-
2025 ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வில் அமர்வதற்கு கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்ததாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட காணொளியில் காணப்பட்ட மாணவன், பாதுகாப்பாக உள்ளான் என்று பகாங் மாநில கல்வி இலாகா உறுதிப்படுத்தியது.
கடந்த சனிக்கிழமை நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தில் அந்த மாணவனின் வீட்டிற்குச் செல்லும் பாதை வெள்ளக்காடாக மாறியது. இதனால், தாம் தங்கியிருந்த பள்ளியின் தங்கும் விடுதிக்குச் செல்ல முடியாமல் போய்விடுமோ? திங்கட்கிழமை எஸ்பிஎம் சோதனையில் அமர முடியாமல் போய்விடுமோ என்று அந்த மாணவன் அச்சம் அடைந்துள்ளான்.
இதன் காரணமாக அந்த மாணவன் வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் கரைபுரண்டோடிய வெள்ள நீரில் நீந்தி, பிரதானப் பாதைக்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அந்த மாணவன் தற்போது கோல லிப்பிஸ், கோல லானார் தேசிய இடைநிலைப்பள்ளியின் தங்கும் விடுதியில் பாதுகாப்பாக உள்ளான். மற்ற மாணவர்களுடன் தொடர்ந்து வரும் எஸ்பிஎம் தேர்வின் இதர சோதனைகளிலும் அமர்வதற்குத் தயாராக உள்ளான் என்று பகாங் கல்வி இலாகா இன்று வெளியிடுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








