Mar 16, 2026
Thisaigal NewsYouTube
ஜம்ரி மீது இன்று குற்றம் சாட்டப்படவில்லை
தற்போதைய செய்திகள்

ஜம்ரி மீது இன்று குற்றம் சாட்டப்படவில்லை

Share:

ஜம்ரி வினோத் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என வெளிவந்துள்ள தகவலை அந்த சர்ச்சைக்குரிய சமய போதகரின் வழக்கறிஞர் மறுத்துள்ளார்.

போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தனது கட்சிக்காரர் மீது எப்போது குற்றம் சாட்டப்படும் என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை என ஹனீப் கத்ரி அப்துல்லா தெரிவித்துள்ளதாக ஹரியான் மெட்ரோ செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜம்ரி மீது குற்றம் சாட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக காலையில் தகவல்கள் பரவியிருந்த நிலையில் இச்செய்தி வெளிவந்துள்ளது .

ஜம்ரி மற்றும் சமூக ஆர்வலர் தமீம் தஹ்ரி அப்துல் ரசாக் மீது வழக்குத் தொடர அட்டர்னி ஜெனரலிடமிருந்து உத்தரவு பெறப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் கடந்த வெள்ளிக்கிழமை கூறியிருந்தது. இருப்பினும் அவ்விருவரும் தாய்லாந்திற்கு தப்பிச் சென்று விட்டதாகவும் அவர்களைத் தேட அந்நாட்டு போலீசாரின் உதவி நாடப்பட்டுள்ளதாகவும் தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமது காலித் இஸ்மாயில் தெரிவித்தார்.

இந்நிலையில் தாம் தப்பிக்க எண்ணவில்லை எனவும் விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் ஜம்ரி குறிப்பிட்டுள்ளார். அதே சமயம் ‘முடிந்தால் என்னைப் பிடியுங்கள்’ என தமீம், காவல்துறையினரை கேலி செய்து சமூக ஊடகப் பதிவொன்றை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது

பிப்ரவரி 7 ஆம் தேதி கோலாலம்பூரில் உள்ள சோகோ விற்பனை மையத்திற்கு வெளியே நடந்த ஒரு கூட்டத்தின் போது, ​​பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய கருத்துகளை வெளியிட்டதற்காக ஜம்ரி மீது குற்றம் சாட்டப்படும் என IGP முன்னதாகக் கூறியிருந்தார்.

அது "சட்டவிரோதமானவை" என அழைக்கப்படும் வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக திட்டமிடப்பட்ட பேரணி குறித்தது என நம்பப்படுகிறது.

இந்திய சமூகத்தை அவமதிக்கும் நோக்கில் கருத்து வெளியிட்டதற்காக ஜம்ரி மீது பினாங்கில் தேசத்துரோகக் குற்றச்சாட்டும் சுமத்தப்படும் என்றும் காலித் கூறியிருந்தார்.

Related News