Jul 20, 2026
Thisaigal NewsYouTube
புக்கிட் மெர்தாஜாம் மனிதக் கடத்தல் சம்பவம்: தீவிர விசாரணை நடத்த அமைச்சர் ஸ்டீவன் சிம் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

புக்கிட் மெர்தாஜாம் மனிதக் கடத்தல் சம்பவம்: தீவிர விசாரணை நடத்த அமைச்சர் ஸ்டீவன் சிம் வலியுறுத்து

Share:

ஜார்ஜ்டவுன், ஜூலை.19-

புக்கிட் மெர்தாஜாம், பெராபிட் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதக் கடத்தல் கும்பல் தொடர்பாக, முழுமையான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று புக்கிட் மெர்தாஜாம் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவன் சிம் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்ட செபராங் பிறை தெங்கா மாவட்ட போலீசாருக்கும், புக்கிட் அமான் போலீசாருக்கும் அவர் தமது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், எல்லை தாண்டிய குற்றங்களை ஒடுக்க போலீசார் காட்டிய அர்ப்பணிப்பை இது வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மனிதக் கடத்தல் மற்றும் இணைய மோசடி கும்பல்கள் நாளுக்கு நாள் நவீன முறையில் செயல்படுவதால், உள்துறை அமைச்சும், போலீசாரும், கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை பெராபிட் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், மனிதக் கடத்தல் கும்பலிடம் சிக்கியிருந்த 25 வயதுடைய கெமரூன் பெண் ஒருவர் மீட்கப்பட்டார்.

இந்த நடவடிக்கையில், தைவான் நாட்டைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரும், ஆவணங்கள் இல்லாத 29 வெளிநாட்டவர்களும் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News